நூல்கள்›கலித்தொகை›பாடல் 1772

பாடல் 1772

வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து

ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும்

சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால்,

ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம்,

ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற . . . .

மை படு சென்னிப் பய மலை நாடனை,

தையலாய்! பாடுவாம், நாம்;

தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள்

முகையின்மேல் தும்பி இருக்கும் பகை எனின்,

கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத் . . . .

தோற்றலை நாணாதோன் குன்று;

வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம்,

இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்

வருடைமான் குழவிய வள மலை நாடனைத்

தெருள தெரியிழாய்! நீ ஒன்று பாடித்தை; . . . .

நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக்

கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே

மாறு கொண்டு ஆற்றார்எனினும், பிறர் குற்றம்

கூறுதல் தேற்றாதோன் குன்று;

புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட . . . .

புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்

வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை

மணம் நாறு கதுப்பினாய்! மறுத்து ஒன்று பாடித்தை;

கடுங் கண் உழுவை அடி போல வாழைக்

கொடுங் காய் குலைதொறூஉம் தூங்கும் இடும்பையால் . . . .

இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்,

தன் மெய் துறப்பான் மலை;

என ஆங்கு,

கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு

வாடிய மென் தோளும் வீங்கின . . . .

ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே.

குறிஞ்சிக் கலி

← பாடல் 1771பாடல் 1773 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்