நூல்கள்›கலித்தொகை›பாடல் 1771

பாடல் 1771

'மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த

முறம்செவி வாரணம் முன் குளகு அருந்தி,

கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்

பிறங்கு இருஞ் சோலை நல் மலை நாடன்

மறந்தான்; மறக்க, இனி; எல்லா! நமக்குச் . . . .

சிறந்தன நாம் நன்கு அறிந்தனம், ஆயின்; அவன் திறம்,

கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்,

வள்ளை அகவுவம், வா' 'இகுளை! நாம்

வள்ளை அகவுவம், வா'

காணிய வா வாழி, தோழி! வரைத் தாழ்பு . . . .

வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா

நாணிலி நாட்டு மலை;

ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ

ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்

அறம் புரி நெஞ்சத்தவன்; . . . .

தண் நறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம்

பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளாக்

கொன்னாளன் நாட்டு மலை;

கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? தன் மலை

நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத் . . . .

தேர் ஈயும் வண் கையவன்;

வரைமிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல்

மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ

எவ்வம் உறீஇயினான் குன்று;

எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி . . . .

அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன், என்

நெஞ்சம் பிணிக்கொண்டவன்;

என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன்,

தாழ் இருங் கூந்தல் என் தோழியைக் கை கவியா,

சாயல் இன் மார்பன் சிறு புறம் சார்தர, . . . .

ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என்

ஆயிழை மேனிப் பசப்பு.

குறிஞ்சிக் கலி

← பாடல் 1770பாடல் 1772 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்