நூல்கள்›கலித்தொகை›பாடல் 1770

பாடல் 1770

பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக்

கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா,

ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்

பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! பாடுற்று;

இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள், . . . .

கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து,

பிடியொடு மேயும் புன்செய் யானை

அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்

நெடு வரை ஆசினிப் பணவை ஏறி,

கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின், . . . .

இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி,

ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா,

தேன் செய் இறாஅல் துளைபடப் போகி,

நறு வடி மாவின் பைந் துணர் உழக்கி,

குலையுடை வாழைக் கொழு மடல் கிழியா, . . . .

பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப்

பாடுகம், வா வாழி, தோழி! நல் தோழி! பாடுற்று;

இலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே;

வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற

சூள் பேணான் பொய்த்தான் மலை; . . . .

பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?

'அஞ்சல் ஓம்பு' என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?

குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்,

திங்களுள் தீத் தோன்றியற்று;

இள மழை ஆடும்; இள மழை ஆடும்; . . . .

இள மழை வைகலும் ஆடும் என் முன்கை

வளை நெகிழ வாராதோன் குன்று;

வாராது அமைவானோ? வாராது அமைவானோ?

வாராது அமைகுவான் அல்லன் மலைநாடன்

ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்து . . . .

நீருள் குவளை வெந்தற்று;

மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்;

மண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத்

துன்னான் துறந்தான் மலை;

துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்; . . . .

தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்

தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்

சுடருள் இருள் தோன்றியற்று;

என ஆங்கு

நன்று ஆகின்றால் தோழி! நம் வள்ளையுள் . . . .

ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி,

மென் தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும்

மன்றல் வேங்கைக் கீழ் இருந்து,

மணம் நயந்தனன், அம் மலைகிழவோற்கே.

குறிஞ்சிக் கலி

← பாடல் 1769பாடல் 1771 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்