நூல்கள்›கலித்தொகை›பாடல் 1768

பாடல் 1768

'காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்,

தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்,

நீள் நாக நறுந் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்,

பூண் ஆகம் உறத் தழீஇப் போத்தந்தான் அகன் அகலம்

வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி . . . .

அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;

அவனும்தான், ஏனல் இதணத்து அகிற் புகை உண்டு இயங்கும்

வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரை,

'தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும்

கான் அகல் நாடன் மகன்; . . . .

சிறுகுடியீரே! சிறுகுடியீரே!

வள்ளி கீழ் வீழா; வரைமிசைத் தேன் தொடா;

கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்

அல்ல புரிந்து ஒழுகலான்;

காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின் . . . .

வாங்கு அமை மென் தோட் குறவர் மட மகளிர்

தாம் பிழையார், கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்

தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்'

என ஆங்கு,

அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட . . . .

என்னையர்க்கு உய்த்து உரைத்தாள், யாய்;

அவரும் தெரி கணை நோக்கி, சிலை நோக்கி, கண் சேந்து,

ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி,

'இருவர்கண் குற்றமும் இல்லையால்' என்று,

தெருமந்து சாய்த்தார் தலை . . . .

தெரியிழாய்! நீயும் நின் கேளும் புணர,

வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து

குரவை தழீஇ யாம் ஆட, குரவையுள்

கொண்டுநிலை பாடிக்காண்;

நல்லாய்! . . . .

நல் நாள் தலைவரும் எல்லை, நமர் மலைத்

தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர்கொல்?

புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்,

நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ;

நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே . . . .

கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ;

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்

பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொலோ;

பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங் கேண்மை

கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொலோ; . . . .

மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்

கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ;

என்னை மன் நின் கண்ணால் காண்பென்மன், யான்

நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என் கண் மன;

என ஆங்கு, . . . .

நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ,

தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனமாக,

வேய் புரை மென் தோட் பசலையும், அம்பலும்,

மாயப் புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்க,

சேய் உயர் வெற்பனும் வந்தனன் . . . .

பூ எழில் உண் கணும் பொலிகமா, இனியே!

குறிஞ்சிக் கலி

← பாடல் 1767பாடல் 1769 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்