நூல்கள்›கலித்தொகை›பாடல் 1767

பாடல் 1767

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,

ஐ இரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை

எடுக்கல்செல்லாது உழப்பவன் போல . . . .

உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்

கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை

நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்

கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:

ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், . . . .

நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,

கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின்

தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;

இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,

பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, . . . .

அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி

தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;

மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,

அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,

திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் . . . .

புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்;

என ஆங்கு,

நின் உறு விழுமம் கூறக் கேட்டு,

வருமே, தோழி! நல் மலை நாடன்

வேங்கை விரிவு இடம் நோக்கி, . . . .

வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே.

குறிஞ்சிக் கலி

← பாடல் 1766பாடல் 1768 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்