நூல்கள்›கலித்தொகை›பாடல் 1766

பாடல் 1766

கய மலர் உண்கண்ணாய்! காணாய் ஒருவன்

வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட

கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு,

முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற

நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்; . . . .

பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின்

சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்

கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்;

பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; 'இன்னதூஉம்

காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என் . . . .

தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்

நாண் இன்மை செய்தேன் நறுநுதால்! ஏனல்

இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,

ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,

'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூற, . . . .

'தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு

பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,

ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்

மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை

மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென, . . . .

'ஒண்குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின்

அங்கண் உடையன் அவன்

குறிஞ்சிக் கலி

← பாடல் 1765பாடல் 1767 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்