நூல்கள்›கலித்தொகை›பாடல் 1758

பாடல் 1758

'தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்,

அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல்,

பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம்

புல்லிய புனிறு ஒரீஇப் புது நலம் ஏர்தர;

வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள; . . . .

இளையவர் ஐம்பால் போல், எக்கர் போழ்ந்து அறல் வார;

மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல்,

ஆய் இதழ்ப் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர;

மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின்கண்;

சேயார்கண் சென்ற என் நெஞ்சினை சின்மொழி! . . . .

நீ கூறும் வரைத்து அன்றி, நிறுப்பென்மன் நிறை நீவி,

வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி,

நோய் சேர்ந்த வைகலான், வாடை வந்து அலைத்தரூஉம்;

போழ்து உள்ளார் துறந்தார்கண் புரி வாடும் கொள்கையைச்

சூழ்பு ஆங்கே சுடரிழாய்! கரப்பென்மன் கைநீவி . . . .

வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இருந் தும்பி

யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்;

தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர் உயிர்

வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென்மண் வலிப்பவும்,

நெடு நிலா, திறந்து உண்ண, நிரை இதழ் வாய் விட்ட . . . .

கடி மலர் கமழ் நாற்றம், கங்குல் வந்து, அலைத்தரூஉம்'

என ஆங்கு,

வருந்தினை வதிந்த நின் வளை நீங்க, சேய் நாட்டுப்

பிரிந்து செய் பொருட் பிணி பின் நோக்காது ஏகி, நம்

அருந் துயர் களைஞர் வந்தனர் . . . .

திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே.

பாலைக் கலி

← பாடல் 1757பாடல் 1759 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்