பாடல் 1759
'அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள
விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடி,
புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ் வாயும்,
இருந் தும்பி, இறை கொள எதிரிய வேனிலான்;
துயில் இன்றி யாம் நீந்த, தொழுவை அம் புனல் ஆடி, . . . .
மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான்மன்னோ
'வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில்
குயில் ஆலும் பொழுது' எனக் கூறுநர் உளராயின்;
பானாள் யாம் படர் கூர, பணை எழில் அணை மென் தோள்
மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்மன்னோ . . . .
'ஆனார் சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை,
தேன் ஆர்க்கும் பொழுது' எனத் தெளிக்குநர் உளராயின்;
உறல் யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள்
விறல் இழையவரோடு விளையாடுவான்மன்னோ
'பெறல் அரும் பொழுதோடு, பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து, . . . .
அறல் வாரும், வையை' என்று அறையுநர் உளராயின்'
என ஆங்கு,
தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் தகை பெற,
அணி கிளர் நெடுந் திண் தேர் அயர்மதி பணிபு நின்
காமர் கழல் அடி சேரா . . . .
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே.
பாலைக் கலி