நூல்கள்›கலித்தொகை›பாடல் 1756

பாடல் 1756

'ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய

தீதிலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்த;

பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின்;

மாதரார் முறுவல் போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப;

காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல், கழல்குபு . . . .

தாதொடும் தளிரொடும், தண் அறல் தகை பெற;

பேதையோன் வினை வாங்க, பீடு இலா அரசன் நாட்டு,

ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில்

நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள,

நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க; . . . .

கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய,

புலம் பூத்து, புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார்கொல்?

கன்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற,

தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க;

ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற, . . . .

வென் வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்?

மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள,

பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க;

தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்

வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்;' . . . .

என ஆங்கு,

நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி!

நாம் இல்லாப் புலம்பாயின், நடுக்கம் செய் பொழுதாயின்,

காமவேள் விழவாயின், 'கலங்குவள் பெரிது' என,

ஏமுறு கடுந் திண் தேர் கடவி, . . . .

நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே.

பாலைக் கலி

← பாடல் 1755பாடல் 1757 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்