நூல்கள்›கலித்தொகை›பாடல் 1752

பாடல் 1752

இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,

புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும்

விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம்

தனியே இறப்ப, யான் ஒழிந்திருத்தல்

நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே: . . . .

இனி யான்,

உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்

தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்

வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்;

நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் . . . .

அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்;

கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்

சூடினர் இட்ட பூ ஓரன்னர்;

என ஆங்கு,

யானும் நின்னகத்து அனையேன்; ஆனாது, . . . .

கொலை வெங் கொள்கையொடு நாய் அகப்படுப்ப,

வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல,

நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை

என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே.

பாலைக் கலி

← பாடல் 1751பாடல் 1753 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்