நூல்கள்›கலித்தொகை›பாடல் 1751

பாடல் 1751

உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்

கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல்

பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும்

புதுவது அன்றே புலனுடை மாந்திர்!

தாய் உயிர் பெய்த பாவை போல, . . . .

நலன் உடையார் மொழிக்கண் தாவார்; தாம் தம் நலம்

தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்குங்கால்,

ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை;

நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த

செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின் . . . .

பறி முறை பாராட்டினையோ? ஐய!

நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன

ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல்

செய்வினை பாராட்டினையோ? ஐய!

குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும் . . . .

இள முலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில்

தளர் முலை பாராட்டினையோ? ஐய!

என ஆங்கு,

அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாட,

சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எங்கண் . . . .

படர் கூற நின்றதும் உண்டோ ? தொடர் கூர,

துவ்வாமை வந்தக்கடை.

பாலைக் கலி

← பாடல் 1750பாடல் 1752 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்