நூல்கள்›கலித்தொகை›பாடல் 1741

பாடல் 1741

இடு முள் நெடு வேலி போல, கொலைவர்

கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த

கடு நவை ஆர் ஆற்று, அறுசுனை முற்றி,

உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை

கடுந் தாம் பதிபு, ஆங்குக் கை தெறப்பட்டு, . . . .

வெறி நிரை வேறாகச் சாரச்சாரல் ஓடி,

நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம்

சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும்

நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்!

உரனுடை உள்ளத்தை; செய் பொருள் முற்றிய . . . .

வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்!

இளமையும் காமமும் நின் பாணி நில்லா

இடை முலைக் கோதை குழைய முயங்கும்

முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை

கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை . . . .

போற்றாய் பெரும! நீ, காமம் புகர்பட

வேற்றுமைக் கொண்டு, பொருள்வயிற் போகுவாய்!

கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு

மாற்றுமைக் கொண்ட வழி

பாலைக் கலி

← பாடல் 1740பாடல் 1742 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்