பாடல் 1735
மரையா மரல் கவர, மாரி வறப்ப-
வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,
சுரை அம்பு, மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம்,
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்-
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம் . . . .
கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால்,
என், நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும்,
அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு
துன்பம் துணையாக நாடின், அது அல்லது . . . .
இன்பமும் உண்டோ , எமக்கு?
பாலைக் கலி