நூல்கள்›கலித்தொகை›பாடல் 1733

பாடல் 1733

வலி முன்பின், வல்லென்ற யாக்கைப், புலி நோக்கின்-

சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர்,

அற்றம் பார்த்து அல்கும்-கடுங்கண் மறவர் தாம்

கொள்ளும் பொருள் இலர்ஆயினும், வம்பலர்

துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின், . . . .

புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை,

வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்,

உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி;

'காழ் விரி வகை ஆரம் மீ வரும் இள முலை

போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என் . . . .

தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர்

சூழ்வதை எவன்கொல்? அறியேன்!' என்னும்

'முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக்

கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார், என்

ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர் . . . .

உள்ளுவது எவன்கொல்? அறியேன்!" என்னும்

'நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம்

கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார், என்

ஒள் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர்

எண்ணுவது எவன்கொல்? அறியேன்!' என்னும்; . . . .

எனவாங்கு,

'கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என!' என் தோழி

அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள், நீர்,

பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?

ஒழிக இனி, பெரும! நின் பொருட் பிணிச் செலவே. . . . .

பாலைக் கலி

← பாடல் 1732பாடல் 1734 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்