நூல்கள்›கலித்தொகை›பாடல் 1732

பாடல் 1732

அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்,

வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்-

இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க,

பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்

விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி; . . . .

'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல

இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை;

கடைஇய ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை,

அடையொடு வாடிய அணி மலர்-தகைப்பன;

'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்' என, . . . .

ஒல் ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய் ஆயினை;

செல்லு நீள் ஆற்றிடைச், சேர்ந்து எழுந்த மரம் வாட,

புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன;

'பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்' எனப்,

பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய்ஆயினை; . . . .

துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து

அணி செல, வாடிய அம் தளிர்-தகைப்பன;

எனவாங்கு

யாம் நிற் கூறவும் எம கொள்ளாய்ஆயினை;

ஆனாது இவள்போல் அருள் வந்தவை காட்டி, . . . .

மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்

கானம் தகைப்ப, செலவு.

பாலைக் கலி

← பாடல் 1731பாடல் 1733 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்