பாடல் 1577
பரணர்
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ . . . .
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே!
குறிஞ்சி