பாடல் 1530
கூடலூர்ப் பல் கண்ணனார்
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,
'சாறு' என நுவலும் முது வாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- . . . .
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,
'கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று,
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன் . . . .
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்' எனவே.
மருதம்