பாடல் 1527
நக்கீரர்
'தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே;
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ!
தௌந்தனம் மன்ற; தேயர் என் உயிர்' என,
ஆழல், வாழி- தோழி!- நீ; நின் . . . .
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு,
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய,
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள்
இன் இசை முரசின் இரங்கி, மன்னர் . . . .
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே.
பாலை