பாடல் 1485
பராயனார்
'ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்,
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்,
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்!
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்:
கண்டோர் தண்டா நலத்தை- தெண் திரைப் . . . .
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ?
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ?
சொல், இனி, மடந்தை!' என்றனென்: அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன;
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே. . . . .
நெய்தல்