பாடல் 1479
உலோச்சனார்
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி,
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற,
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப,
அலந்தனென் வாழி- தோழி!- கானல் . . . .
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ,
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால், யானே;
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே! . . . .
நெய்தல்