பாடல் 1477
கொள்ளம்பக்கனார்
யாங்கு ஆகுவமோ- 'அணி நுதற் குறுமகள்!
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி,
அன்னை ஆனாள் கழற, முன் நின்று, . . . .
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து,
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு, . . . .
தலை இறைஞ்சினளே அன்னை;
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே?
குறிஞ்சி