பாடல் 1372
கீரத்தனார்
மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், . . . .
'ஏகுமின்' என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநராக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ . . . .
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.
முல்லை