பாடல் 2496
வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே;
பொய்கையும் போடுகண் விழித்தன; பையச்
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடெழுந்து
இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, . . . .
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி,
எகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை,
வைகறை அரவம் கேளியர்! பலகோள்
செய்தார் மார்ப! எழுமதி துயில்! எனத்,
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, . . . .
நெடுங்கடைத் தோன்றி யேனே; அது நயந்து,
உள்ளி வந்த பரிசிலன் இவன் என,
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு,
மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்,
பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு, . . . .
மாரி யன்ன வண்மையின் சொரிந்து,
வேனில் அன்ன என் வெப்பு நீங்க,
அருங்கலம் நல்கி யோனே; என்றும்,
செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை,
அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த . . . .
தீயொடு விளங்கும் நாடன், வாய்வாள்
வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்;
எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்,
தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்,
என்னென்று அஞ்சலம் யாமே; வென்வெல் . . . .
அருஞ்சமம் கடக்கும் ஆற்றல், அவன்
திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே!
தண் நிழலேமே!