பாடல் 2160
கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,
மலங்கு மிளிர், செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக, . . . .
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடுபோர் ஏறி, விசைத் தெழுந்து, . . . .
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்,
வைகல் யாணர், நன்னாட்டுப் பொருநன்,
எகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி,
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,
தாமறி குவர்தமக்கு உறுதி; யாம் அவன் . . . .
எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல், அதனினும் இலமே!
மலைந்தோரும் பணிந்தோரும்!