பாடல் 2135
அடுநை யாயினும், விடுநை யாயினும்,
நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல்,
செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக், . . . .
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து,
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப, . . . .
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க,
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.
நீயே அறிந்து செய்க!