பாடல் 2126
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே; . . . .
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப, தம் செய்வினை முடித்து எனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! . . . .
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், . . . .
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.
புலவர் பாடும் புகழ்!