நூல்கள்›அகநானூறு›பாடல் 2074

பாடல் 2074

கயமனார்

'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோள் குறுமகள்

திருந்துவேல் விடலையொடு வரும்' எனத், தாயே,

புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி,

மனை மணல் அடுத்து, மாலை நாற்றி,

உவந்து, இனிது அயரும் என்ப; யானும், . . . .

மான் பிணை நோக்கின் மட நல்லாளை

ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்,

இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள்,

கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய

நலம் புனை உதவியும் உடையன் மன்னே; . . . .

அஃது அறி கிற்பினோ நன்றுமன் தில்ல;

அறுவை தோயும் ஒரு பெருங் குடுமிச்,

சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங் கோல்,

ஆகுவது அறியும் முதுவாய், வேல!

கூறுக மாதோ, நின் கழங்கின் திட்பம்! . . . .

மாறா வருபனி கலுழும் கங்குலில்,

ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்,

எம் மனை முந்துறத் தருமோ?

தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே?

மணிமிடைபவளம்

← பாடல் 2073பாடல் 2075 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்