நூல்கள்›அகநானூறு›பாடல் 1981

பாடல் 1981

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன்

உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக்

கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;

உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு

ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,

ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி . . . .

பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;

குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,

படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென

மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;

ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப . . . .

தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,

காவலர் அறிதல் ஓம்பி, பையென

வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,

உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,

இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி! . . . .

இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன்

நல்காமையின் அம்பல் ஆகி,

ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்

இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே?

களிற்றியானை நிரை

← பாடல் 1980பாடல் 1982 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்