நூல்கள்›அகநானூறு›பாடல் 1972

பாடல் 1972

கணக்காயனார் மகனார் நக்கீரனார்

கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,

கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,

ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து;

ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்

அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன . . . .

பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்

செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;

அரண் பல கடந்த, முரண் கொள் தானை,

வாடா வேம்பின், வழுதி கூடல்

நாள் அங்காடி நாறும் நறு நுதல் . . . .

நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,

வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,

நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை

நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,

நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப . . . .

முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்

வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,

மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,

ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,

கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை . . . .

திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை,

தெண் நீர் உயர் கரைக் குவைஇய

தண் ஆன்பொருநை மணலினும் பலவே!

களிற்றியானை நிரை

← பாடல் 1971பாடல் 1973 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்