பாடல் 1950
அந்தி இளங்கீரனார்
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
மை இல் மான் இனம் மருள, பையென . . . .
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக . . . .
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக்
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து . . . .
இது கொல் வாழி, தோழி! என் உயிர்
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?
களிற்றியானை நிரை