பாடல் 1918
மதுரைச் செங்கண்ணனார்
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து,
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து . . . .
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு . . . .
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு,
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென,
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் . . . .
பரந்து படு பாயல் நவ்வி பட்டென,
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,
'இன்னகை! இனையம் ஆகவும், எம்வயின்
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின் . . . .
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின், புலத்தியால், எம்மே! . . . .
களிற்றியானை நிரை