பாடல் 1893
ஒக்கூர் மாசாத்தனார்
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ . . . .
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர,
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற . . . .
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின், காலை
யாங்கு ஆகுவம் கொல்? பாண!' என்ற
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன்,
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென . . . .
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து,
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக,
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
கார் மழை முழக்கு இசை கடுக்கும் . . . .
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே.
களிற்றியானை நிரை