நூல்கள்›கலித்தொகை›பாடல் 1830

பாடல் 1830

தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று,

முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்;

களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,

ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்;

மணி புரை உருவின காயாவும்; பிறவும்; . . . .

அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்,

மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,

சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,

ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு;

அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப . . . .

வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி

நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப,

துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்

முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ

மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண் . . . .

நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்தி,

கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்

அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்

நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்

வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்; . . . .

சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி

விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி,

குடர் சொரியக் குத்தி, குலைப்பதன் தோற்றம் காண்

படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்

இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு, . . . .

குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்;

செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக்

கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி,

நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்

ஆர் இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன் . . . .

தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்

தோளின் திருகுவான் போன்ம்;

என ஆங்கு

அணி மாலைக் கேள்வன் தரூஉமார், ஆயர்

மணி மாலை ஊதும் குழல் . . . .

கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை

விடாஅது நீ கொள்குவை, ஆயின்; படாஅகை

ஈன்றன, ஆய மகள் தோள்;

பகலிடக் கண்ணியன், பைதற் குழலன்,

சுவன்மிசைக் கோல் அசைத்த கையன், அயலது; . . . .

கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இருங்

கூந்தல் அணை கொடுப்பேம், யாம்;

'கோளாளர் என் ஒப்பார் இல்' என நம் ஆனுள்,

தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு, ஒரு நாள்,

கோளாளன் ஆகாமை இல்லை; அவற் கண்டு . . . .

வேளாண்மை செய்தன கண்;

ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்;

நாறு இருங் கூந்தற் பொதுமகளிர் எல்லாரும்

முல்லைஅம் தண் பொழில் புக்கார், பொதுவரோடு,

எல்லாம் புணர் குறிக் கொண்டு. . . . .

முல்லைக் கலி

← பாடல் 1829பாடல் 1831 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்