நூல்கள்›கலித்தொகை›பாடல் 1806

பாடல் 1806

இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும்

துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்;

திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள்

அரி மதர் மழைக் கண் நீர் அலர்முலைமேல் தெறிப்பபோல்,

தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி, . . . .

மிக நனி சேர்ந்த அம் முகைமிசை அம் மலர்

அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்:

தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக்

கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன்

உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, 'நின் . . . .

பெண்டு' எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்;

பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செல;

தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன்

நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள்

என்னுழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்; . . . .

மாசு அற மண் உற்ற மணி ஏசும் இருங் கூந்தல்

வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன்

நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம் மனை

நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்;

ஆங்க . . . .

'கடைஇய நின் மார்பு தோயலம்' என்னும்,

இடையும், நிறையும் எளிதோ நிற் காணின்,

கடவுபு, கைத்தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு

உடன் வாழ் பகை உடையார்க்கு.

மருதக் கலி

← பாடல் 1805பாடல் 1807 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்