பாடல் 1778
கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்,
கனவில் கண்டு, கதுமென வெரீஇ,
புதுவதாக மலர்ந்த வேங்கையை . . . .
'அது' என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி,
பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது,
நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட!
போது எழில் மலர் உண்கண் இவள்மாட்டு நீ இன்ன . . . .
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே,
மின் ஓரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய்,
இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;
இன்புற அளித்தனை இவள்மாட்டு நீ இன்ன
அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே, . . . .
மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து,
அணங்குடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;
இருள் உறழ் இருங் கூந்தல் இவள்மாட்டு நீ இன்ன
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே,
ஒளிறு வேல் வலன் ஏந்தி, 'ஒருவன் யான்' என்னாது, . . . .
களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை
அதனால்
இரவின் வாரல், ஐய! விரவு வீ
அகல் அறை வரிக்கும் சாரல்,
பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே. . . . .
குறிஞ்சிக் கலி