பாடல் 1688
நக்கீரர்
'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட,
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர,
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி,
நின்னொடு தௌத்தனர் ஆயினும், என்னதூஉம்,
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என . . . .
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்,
பரவினம் வருகம் சென்மோ - தோழி!
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என் . . . .
அரும் பெறல் ஆய் கவின் தொலைய,
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே.
நெய்தல்