பாடல் 1866
அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;
பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே;
பலவே யாமம்; பையுளும் உடைய;
சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்;
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து, . . . .
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின்
அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே;
மெல்லிய நெஞ்சு பையுள் கூர, தம்
சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை
வல்லவன் தைஇய, வாக்கு அமை கடு விசை . . . .
வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆயிழை!
வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய்,
நகை முதலாக, நட்பினுள் எழுந்த
தகைமையில் நலிதல் அல்லது, அவர் நம்மை
வகைமையின் எழுந்த தொல் முரண் முதலாக, . . . .
பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆயிழை!
பகைமையிற் கடிது, அவர் தகைமையின் நலியு நோய்,
நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்து, தம்
சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப்
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த் . . . .
தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆயிழை!
தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய்;
ஆங்கு
அன்னர் காதலராக, அவர் நமக்கு
இன் உயிர் பேர்த்தரும் மருத்துவர் ஆயின், . . . .
யாங்கு ஆவதுகொல்? தோழி! எனையதூஉம்
தாங்குதல் வலித்தன்று ஆயின்,
நீங்கரிது உற்ற அன்று, அவர் உறீஇய நோயே.
நெய்தற் கலி