பாடல் 1854
'கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,'
வண் பரி நவின்ற வய மான் செல்வ! . . . .
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
'அன்பு இலை' என வந்து கழறுவல்; ஐய! கேள்;
மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! . . . .
இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ,
நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப்
புலந்து அழ, புல்லாது விடுவாய்!
இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியைகாண் நீ; . . . .
இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால்
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்
நுண் வரி வாட, வாராது விடுவாய்!
தண்ணந் துறைவ! தகாஅய்காண் நீ;
என ஆங்கு . . . .
அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று
இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப்
பிறை ஏர் சுடர் நுதற் பசலை
மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே.
நெய்தற் கலி