நூல்கள்›கலித்தொகை›பாடல் 1804

பாடல் 1804

'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய

நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்,

சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும்

ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து,

ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி . . . .

உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி,

அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய்

தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும்

உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்

புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின், . . . .

வதுவை நாளால் வைகலும், அஃது யான்

நோவேன், தோழி! நோவாய், நீ' என

எற் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென:

'எல்லினை வருதி; எவன் குறித்தனை?' எனச்

சொல்லாதிருப்பேனாயின், ஒல்லென, . . . .

விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த

விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்;

'வாடிய பூவொடு வாரல், எம் மனை?' என

ஊடியிருப்பேனாயின், நீடாது,

அச்சு ஆறாக உணரிய வருபவன் . . . .

பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்

'பகல் ஆண்டு அல்கினை, பரத்த!' என்று யான்

இகலியிருப்பேனாயின், தான் தன்

முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற

புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும் . . . .

ஆங்க

விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும்,

அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்,

ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,

அவ்அவ் இடத்தான் அவைஅவை காண . . . .

பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்

மாய மகிழ்நன் பரத்தைமை

நோவேன், தோழி! கடன் நமக்கு எனவே.

மருதக் கலி

← பாடல் 1803பாடல் 1805 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்