நூல்கள்›கலித்தொகை›பாடல் 1776

பாடல் 1776

ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்; உலகம்

புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்;

வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்,

நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்;

இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க . . . .

வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்;

அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச்

சொல்லும் சொல், கேட்டீ சுடரிழாய்! பல் மாணும்;

'நின் இன்றி அமையலேன் யான்' என்னும் அவன் ஆயின்,

அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதுஆயின், . . . .

என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ? நறுநுதால்!

'அறியாய் நீ; வருந்துவல் யான்' என்னும் அவன் ஆயின்,

தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிதுஆயின்,

அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்;

'வாழலேன், யான்' என்னும் 'நீ நீப்பின்' அவன் ஆயின், . . . .

'ஏழையர்' எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின்,

சூழுங் கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்;

சூழுங்கால், நறுநுதால்! நம்முளே சூழ்குவம்

'அவனை,

நாண் அட, பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது; . . . .

"பேணினர்" எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன்

வௌவினன் முயங்கும் மாத்திரம் வா' எனக்

கூறுவென் போலக் காட்டி,

மற்று அவன் மேஎவழி மேவாய், நெஞ்சே!

குறிஞ்சிக் கலி

← பாடல் 1775பாடல் 1777 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்