நூல்கள்›கலித்தொகை›பாடல் 1764

பாடல் 1764

'மடியிலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம்

படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப;

மாயவள் மேனி போல் தளிர் ஈன், அம் மேனித்

தாய சுணங்கு போல் தளிர்மிசைத் தாது உக;

மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப, . . . .

அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார;

நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால்,

துறந்து உள்ளார் அவர்' எனத் துனி கொள்ளல் எல்லா! நீ

'வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர்,

தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ . . . .

கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால்,

ஒண்ணுதால்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை;

மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர்,

வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ

"வலன் ஆக, வினை!" என்று வணங்கி, நாம் விடுத்தக்கால், . . . .

ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை;

நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார்

புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ

பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால்,

சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை; . . . .

என ஆங்கு,

உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பாகி,

எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல்

காமர் கடுந் திண் தேர்ப் பொருப்பன்

வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே. . . . .

பாலைக் கலி

← பாடல் 1763பாடல் 1765 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்